வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு, இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் முகவரி மற்றும் யார் அனுப்பியவர்கள் என்ன விடயத்திற்கான விசாரணைகள் என குறிப்பிடாது விசாரணைக்கு வருமாறு சிறு துண்டில் எழுதிக் கொடுத்துள்ளனர்.
ஆனால், அன்றைய தினத்தில் வர முடியாதென்றும், உத்தியோகபூர்வமான அறிவத்தல்களுடன் வருமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டைக்கடிதப்பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த அவர் எதிர்வரும் ஜீன் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையென தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சரிடமே மொட்டைக்கடித அழைப்பாணையுடன் வருகை தரும் இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சாதாரண பொதுமக்களுடன் எவ்வாறு கையாளுவர் என்பது குறித்து தனக்கு சந்தேகமிருப்பதாக கலாநிதி.க.சர்வேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் இப்பிரிவினர் சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக கடிதங்களை கையாளது மொட்டைக்கடித பாணியில் அனுப்பிவைப்பதும் எதற்காகவெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.