தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாகப் பிரித்து வைத்திருக்கும் பேரினவாத இலங்கை அரசு, இப்போது வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டி அவற்றையும் பிளவுபடுத்தும் திரைமறைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சிகளில் ஒன்றாகவே, வடக்கு மாகாணசபை நிதியை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என்றும், முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்றும் எல்லா மாவட்டங்களுக்கிடையிலும் நிதி சமமாகப் பகிரப்படவேண்டும் என்றும் உண்மைக்குப் புறம்பாகத் தீவிரமான பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத்துக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று (01.11.2014) நாரந்தனை கணேச வித்தியாலத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடமாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நாரந்தனையில் விவசாயக் காடுவளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய மரங்கள் விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மரங்கள் நாட்டுவது அமைதியின் குறியீடாகவும், மக்களின் ஒற்றுமைக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. நாம் மரநடுகை மாதத்தை பிரகடனப்படுத்தியதற்கான பல்வேறு காரணங்களில் இந்த ஒற்றுமையும் ஒன்று. ஆனால், வடக்கு மாகாணசபை நிதியை பங்கிடுவதில் பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது மக்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனர்.
எறும்புக்குத் தேவைப்படுவதைவிட பல்லாயிரம் மடங்கு உணவு யானைக்குத் தேவைப்படுகிறது. இது ஏற்றத்தாழ்வு அல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகேற்ப என்பதே பொருளாதார சமத்துவத்தின் உண்மையான பொருள். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே நாமும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் தேவைகள், இவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய தேவைகள், மாவட்டத்துக்குப் பொருத்தமான திட்டங்கள், மாவட்டத்தின் சனத்தொகை போன்ற பல்வேறு காரணிகளையும் விரிவாக அலசி ஆராய்ந்த பின்னரே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கிறோம்.
எனது அமைச்சுக்கு இந்த ஆண்டில் விவசாய அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நிதி 60 மில்லியன் ரூபாய். இதில் கிளிநொச்சிக்கு 8.38 மில்லியனையும், மன்னாருக்கு 10.53 மில்லியனையும், வவுனியாவுக்கு 11.03 மில்லியனையும், யாழ்ப்பாணத்துக்கு 11.48 மில்லியனையும் பகிர்ந்தளித்துள்ளோம். ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி 18.58 மில்லியன் ரூபாய். இதே போன்றுதான், மாகாணசபையை நாம் பொறுபேற்ற ஒருவருடத்தில் நீர்ப்பாசனத் திணைக்களங்களினூடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கே மிகப் பெருமளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் கடந்த ஒருவருடத்தில் 2,664,43 மில்லியன் ரூபாய்களுக்கான நீர்ப்பாசன வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது வடக்கு மாகாணத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 62 விழுக்காடு. உண்மைகள் இவ்வாறு இருக்க, முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதெனில், இதன் பின்னணி பற்றி யாரும் சந்தேகிக்காமல் இருக்க முடியாது.
எனவே, நன்னாளான மரநடுகை மாதத்தின் தொடக்கத் தினமான இன்று, எல்லா மாவட்டங்களும் எங்களுடையனவே, இங்கு வாழும் எல்லா மக்களும் எம்மவரே என்பதால் ஒருபோதும் நாம் பாரபட்சத்தைக் காண்பிக்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறுவதோடு, பிரதேசவாதங்களைக் கிளப்பி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எவரும் பலியாகிவிடவேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
வடக்கு முதல்வர் க. வி விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்சியில் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் இ. ஆனல்ட், பா.கஜதீபன், எம். கே. சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், ச. சுகிர்தன், விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.