வடக்கின் பெரும் போரில் வெற்றிபெற்றது சென்.ஜோன்ஸ் கல்லூரி!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி – சென்ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

st-jons

மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் 109 ஆவது போட்டியில் வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று மூன்றாவது நாளான சனிக்கிழமை பகல் போட்டி ஆரம்பமாகியதும் துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி 09 விக்கெட்டுக்களை இழந்து 139 ஒட்டங்களை பெற்ற நிலையில ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

வெற்றிக்காக 273 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மத்திய கல்லூரி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதில் ஆரம்ப வீரராக களமிறங்கிய நிரோசன் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 276 பந்துகளில் 8 பெளண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 72 ஓட்டங்களையும், கார்த்தீபன் 7 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களையும், கௌதமன் 4 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டடங்களையும், நிரோஜன் 17 ஓட்டங்களையும், கிருபாகரன் 14 ஒட்டங்களையும் பெற்றனர்.

சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கபில்ராஜ் 17.1 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 40 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கிசாந்திகன் 12 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும், துவாரகசீலன், கஜீபன், ஜதுசன், லோகதீஸ்வரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

சிறந்த துடுப்பாட்டவீரர் – ஜெனிபிளமின் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் – கிசாந்திகன்(சென்.ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் – கௌதமன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த சகல துறை வீரர் – திரேசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த விக்கெட் காப்பாளர் – கபில்ராஜ் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

ஆட்டநாயகன் – ஜெனிபிளமின் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

Related Posts