வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ள அமைச்சர்களான த.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேகசன் ஆகியோரின் அமைச்சுக்களான, முறையே கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த அமைச்சுக்களுக்கு உரியவர்களை நியமிப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாகவும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மாவட்ட ரீதியிலான தேவைகளின் அடிப்படையில் புதிய நியமனங்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.