வடக்கின் பிரபல தொழிலதிபர் அண்ணா நடராஜா நேற்றுக் காலமானார்

anna

வடக்கின் பிரபல தொழிலதிபரும், உள்ளூர் உற்பத்தித் துறையில் தடம் பதித்தவருமான அண்ணா கோப்பி நிறுவனர் பொ.நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது 69 ஆவது அகவையில் காலமானார்.

இணுவில் தெற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவராவார்.

தமது சுய முயற்சியால் வீட்டில் கோப்பியைத் தயாரித்துத் தாமே அதனைத் துவிச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தார்.

ஒரு சில வருடங்களிலேயே தனது அயராத முயற்சியின் பலனாக தனது சொந்த ஊரிலேயே ‘அண்ணா தொழிலகம்’ என்ற பெயரில் தொழிற்சாலையை நிறுவிப் பல்வேறு தயாரிப்புக்களைத் தயாரித்ததோடு மாத்திரம் நின்று விடாது பலருக்கும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம் அண்ணா உற்பத்திப் பொருட்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் தனி மரியாதையை ஏற்படுத்தியவர்.

மூத்த கைத்தொழிலாளர் மில்க்வைற் அதிபர் க.கனகராசாவின் அரவணைப்பில் தன்னை உயர்த்திய அண்ணா நடராஜா உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் வெற்றிகளைக் குவித்தார்.

1995 ஆம் ஆண்டளவில் கொடிய யுத்த மேகம் குடாநாட்டைச் சூழ்ந்த போது பொதுமக்களுக்குத் தன்னாலான அர்ப்பணிப்பான உதவிகளைச் செய்தார்.

அதன் பின்னர் அண்ணா தயாரிப்புக்களை அகில இலங்கை ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பிரபலப்படுத்திய அண்ணா நடராஜா காலவோட்டத்தில் வடக்கின் பிரபல தொழிலதிபராக உயர்ந்தார். அத்துடன் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts