Ad Widget

வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும்- பொ.ஐங்கரநேசன்

வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

01

வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வடக்கின் பாரம்பரிய உணவுத் திருவிழா இடம்பெற்றது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரமத விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

நவீன மருத்துவத்தால் எங்கள் ஆயுளை நீடிக்க முடிந்திருக்கிறதே தவிர, ஆரோக்கியமாக வாழவைக்க முடியவில்லை. எங்கள் முன்னோர்களுக்கு உணவுதான் மருந்து. இதனால் நோய்நொடியில்லாமல் அவர்களால் ஆரோக்கியத்துடன் வாழ முடிந்திருக்கிறது. ஆனால், இப்போது மருந்துதான் உணவு. மூன்று வேளையும் சாப்பிடுகிறோமோ இல்லையோ, தவறாமல் மருந்துகளை உட்கொண்டு வருகிறோம்.

அடுக்களைகளில் சுவைச் சரக்குகளை வைப்பதற்கென முன்னர் அஞ்சறைப் பெட்டிகளை வைத்திருந்தோம். இப்போது, ஐந்து அறைகள் அல்ல, ஏராளமான அறைகளைக்கொண்ட மாத்திரைப் பெட்டிகளைத்தான் வைத்திருக்கிறோம். அதில் விதம் விதமான மாத்திரைகளை நிரப்பி வைத்திருக்கிறோம்.

தமிழர்களுக்கெனத் தனித்துவமான உணவுப் பண்பாடு உள்ளது. அந்த உணவுப் பண்பாட்டைக் கைவிட்டு, பாரம்பரிய உணவுகளில் இருந்து துரித உணவுகளுக்;கு நாம் பெருமளவுக்கு மாறிவிட்டோம். இதுதான், மருந்து மாத்திரைகளுடன் நாங்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாரம்பரிய உணவுகளுக்கு நாங்கள் மீளவும் திரும்ப வேண்டும் எமது அன்றாட உணவில் ஒருவேளை உணவாவது பாரம்பரிய உணவாக இருக்க வேண்டும்.

பாரம்பரிய உணவுகளை மக்களிடையே பிரபலப்படுத்த இதுபோன்ற உணவுத்திருவிழாக்கள் உதவும். அதேசமயம், பாரம்பரிய உணவுகளின் நிரந்தர விற்பனைக் கூடங்களை அமைக்கவும் நாங்கள் முன்வரவேண்டும். வெளிநாடுகளில் இருந்துவந்து செல்லும் தமிழ் உறவுகளிடையேயும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையேயும் இவை கண்டிப்பாகப்; பெரும் வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் கே.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா, யாழ்ப்பாண பிரதேச செயலர் பொ.தயானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது பாரம்பரிய உணவுத்தயாரிப்பு போட்டிகள் நடாத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு..

Related Posts