வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளின்போது வன்செயல்களுக்கு இடமில்லை!

யாழ்.நகரப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது, மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களையும் அனுமதிக்க முடியாது, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, யாழ் குடாநாட்டில் கிரிக்கெட் போட்டிகளின்போது, கடந்த காலங்களில் இரண்டு கொலைகள் நடந்ததைச் சுட்டிக்காட்டி நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

பத்து கிலோவுக்கு மேற்பட்ட அளவு கேரளா கஞ்சா உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கான பிணை வழக்கொன்றிலேயே இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி தனது எச்சரிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

கிரிக்கெட் போட்டிகளின்போது மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களில் ஈடுபட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கிரிக்கெட் போட்டி இடம்பெறும் மைதானத்திற்குள் மதுபோதையில் செல்வது தடை செய்யப்படுகின்றது .

மைதானத்திற்குள் செல்பவர்கள் போதை வஸ்து பாவித்துள்ளனரா என்பது சோதனையிடப்பட்டு, போதைக்கு ஆளாகியிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மது போத்தல்கள் பியர் டின்களுடன் மைதானத்திற்குள் செல்வது தடை செய்யப்படுகின்றது.

மைதானத்திற்குள் குழுக்களாக இயங்கி அநாகரிகமான முறையில் மோதல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும்.

மைதானத்தின் வெளி வீதிகள் மற்றும் யாழ் வீதிகளில் ஒழுங்கற்ற முறையில் பாண்ட் வாத்தியங்கள் அல்லது மேளதாளங்களுடன் முறையற்ற விதத்தில் ஊர்வலம் செல்வது சட்டவிரோதமாகக் கூடுவது

போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிப்பது, அரச திணைக்களங்கள், பாடசாலைகள், வைத்தியாசலைகளின் எதிரில் நின்று கூக்குரலிடுவது, கல்லூரி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வீதிகளில் ஆட்டம் போடுவது போன்ற அனைத்து குற்றச் செயல்களும் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒழுங்கு முறையான வாத்தியக் குழுக்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாத்திய மேளதாள கோஷங்கள் என்பவற்றில் தலையீடு இல்லை.

மைதனாத்திற்கு வெளியில் உள்ள ஐஸ் கிறீம் வியாபாரிகள் அன்னாசி மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் போதை வஸ்து மற்றும் மது விற்பனையில் ஈடுபடக் கூடாது.

இந்த வியாபாரிகள் போதைவஸ்து மற்றும் மது விற்பனையில் ஈடுபடுகின்றனரா என்று அறிந்து அத்தகையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்காக, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெற்றி தோல்விகளை சகிக்க முடியாத ஆதரவாளர்கள் வன்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கிரிக்கெட் போட்டிகள் முடியும் காலம் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை நீதிபதியின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிக முக்கியமாக, கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொள்ளும் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர் குழாம், மாணவர் தலைவர்கள் சாரணர் அமைப்பு, முதலுதவி குழுக்கள், பாடசாலைகளின் விசேட அணிகள், பழைய மாணவர் குழாம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் மாணவர்கள், ஆதரவாளர்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கிரிக்கட் போட்டியைப் பார்வையிட வரும் பொதுமக்கள் விடயத்தில் பொலிசார் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

Related Posts