அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றியோர், சித்தியடைந்தோர் வீதத்தை நோக்கும்போது முதல் இடத்தில் மேற்கு மாகாணமும் இரண்டாம் இடத்தில் தெற்கு மாகாணமும் மூன்றாமிடத்தில் வடமேற்கு மாகாணமும் உள்ளன.
சப்பிரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வடக்கு மாகாணம் என்பன முறையே 4 ஆம், 5 ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம், 9 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் கிடைத்த புள்ளி விவரத் தரவுகளின் விவரம் வருமாறு:
மேற்கு மாகாணத்தில் 69 ஆயிரத்து 614 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 337 பேர் சித்தியடைந்துள்ளனர். இரண்டாயிரம் பேர் ஒன்பது “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். இரண்டாயிரத்து 692 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
தெற்கு மாகாணத்தில் 34 ஆயிரத்து 908 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 21 ஆயிரத்து 944 பேர் சித்தியடைந்துள்ளனர். 507 பேர் ஒன்பது பாடத்திலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 891 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
வடமேற்கு மாகாணத்தில் 30 ஆயிரத்து 689 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 19 ஆயிரத்து 237 பேர் சித்தியடைந்துள்ளனர். 291 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 104 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
சப்பிரகமுவ மாகாணத்தில் 25 ஆயிரத்து 253 பேர் தோற்றி அதில் 15 ஆயிரத்து 262 பேர் சித்தியடைந்துள்ளனர். 226 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 325 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 35 ஆயிரத்து 265 பேர் தோற்றி அதில் 20 ஆயிரத்து 309 பேர் சித்தியடைந்துள்ளனர். 462 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 930 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்து 848 பேர் தோற்றி அதில் 11 ஆயிரத்து 755 பேர் சித்தியடைந்துள்ளனர். 148 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். 798 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் 16 ஆயிரத்து 797 பேர் தோற்றி அதில் 9 ஆயிரத்து 422 பேர் சித்தியடைந்துள்ளனர். 84 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். ஆயிரத்து 329 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
ஒன்பதாவது இடத்திலுள்ள வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 21 பேர் தோற்றியுள்ளனர். இதில் 9ஆயிரத்து 778 பேர் சித்தியடைந்துள்ளனர். 103 பேர் அனைத்துப் பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தியடைந்துள்ளனர். 646 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
இந்த அடிப்படையில் நோக்கும்போது நாட்டில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 32 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 191 பேர் சித்தியடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 908 பேர் அனைத்துப் பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். 12 ஆயிரத்து 795 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
பாடசாலைப் பரீட்சார்த்திகள் மூலமே இந்த விடயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது