வடக்கின் அபிவிருத்திகளுக்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை – ஆளுநர் ஆதங்கம்

வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எனினும் இவ்விடயங்களில் அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து செயற்படவில்லையென ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் நான் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.

குறிப்பாக வடக்கில் நீர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திட்டமிட்டு வருகின்றோம். எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுத்து வருகின்றோம்.

ஆனால் அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்வாதிகளில் ஒருவர் கூட என்னுடன் இது தொடர்பாக கதைக்கவில்லை.

இதேவேளை, நான் அரசியல்வாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திட்டம் குறித்து என்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts