வடக்கின் அடுத்த முதலமைச்சரும் விக்னேஸ்வரன்தான் :ஐங்கரநேசன்

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒரு புறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு வருகின்ற நிதியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாமல் திருப்பி அனுப்புகின்றார் என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், இன்னொருபுறம் வடக்கின் வெகுமக்களோ முதமைச்சரைக் கொண்டாடுகிறார்கள். முதலமைச்சர் எவருக்கும் அடிபணியாமல், எதற்கும் சோரம்போகமல், இனத்தின் குரலாக ஒலிப்பதாலேயே இவ்வளவு விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்கிறார் என்பதை அவர்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு இருக்கும் வரை வடக்கின் அடுத்த முதலமைச்சரும் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள்தான் என்று முன்னாள் விவசாய அமைச்சரும், வடமாகாணசபை உறுப்பினரும், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைத் தேர்தலில் ஐங்கரநேசனின் வழிகாட்டுதலில் மாம்பழச் சின்னத்தில் சுயேச்சைக்குழு போட்டியிடுகின்றது. இவர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு உறுதிபடக் கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உள்ளுராட்சிச் சபைகள் முற்றுமுழுதாகப் பிரதேசத்தின் அபிவிருத்தியுடன் தொடர்பானவை. இதன்காரணமாக உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது அபிவிருத்திபற்றி மட்டும் பேசினால் போதும், அரசியல் பற்றிப்பேச வேண்டாம் என்று சில தரப்பினர் கூறிவருகிறார்கள். இனப்பிரச்சினை காரணமாகவே எமது பிரதேசங்களின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது. எனவே எமது பிரதேசங்களில் நிலையான அபிவிருத்தி என்பது தமிழ்மக்களுக்கான நிலையான, முழுமையான அரசியல் தீர்விலேயே தங்கியிருக்கிறது. இதனால், அந்தத் தீர்வை எட்டும்வரை அபிவிருத்திப்பற்றிப் பேசும்போது அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் நாம் உரத்துப்பேச வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளோம்.

எமது பிரதேசத்துக்குப் பொருத்தம் இல்லாத பொருத்து வீட்டுத்திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் கடுமையாக எதிர்த்தபோது மத்திய அமைச்சர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆலயங்களைப் புனரமைப்பதற்கான நிதியை உங்களுடைய பரிந்துரையின் பேரில் ஒதுக்கீடு செய்கிறேன், பட்டியலைத் தாருங்கள் என்று கேட்டார். பிரத்தியேகமாக எனது பரிந்துரையில் மேற்கொள்ளப்படும் ஒதுக்கீடு எனக்குப் போடப்படும் வாய்ப்பூட்டு என்பதால் நான் அதனைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. மத்திய அரசாங்கம் அபிவிருத்திக்குத் தருகின்ற நிதியாக இருந்தாலும் வழமைக்கு மாறாக, எல்லோருக்கும் அல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வழங்கப்படும் ஒதுக்கீடாக அது இருந்தால் அது அந்நிதியைப் பெற்றுக்கொள்வோரை வாய்மூடி மௌனிகளாக்கும் அரசியல் இலஞ்சம்தான்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டுக்கொண்டிருப்பவர். அதேசமயம் அபிவிருத்தியின் பெயரால் எமது இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சமாதிகட்டும் அரசின் முயற்சிகளுக்கு அவர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். இதனால்தான் அவர் அபிவிருத்திக்குத் தடையாக உள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறார். நல்லூர் பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை சுயேச்சைக் குழுவிடம் வாக்காளர்கள் தந்தால் வினைத்திறன் மிக்க நிர்வாகத்தைக் கட்டியெழுப்பி நல்லூரை நாட்டுக்கே முன்மாதிரியான பிரதேசமாக நிலையான அபிவிருத்தி அடையச் செய்வோம். அதேசமயம், முதலமைச்சர் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி, நிலையான அரசியல் தீர்வை நோக்கியும் நகர்வோம் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல்துறைப் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டு உள்ளுராட்சி தேர்தல் முறைமை மற்றும் வாக்களிப்பின் அவசியம் குறித்துப் பேசியிருந்தார்கள்.

Related Posts