வடக்கில் நீண்டகாலமாக நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்களின் வாழ்வில் பல்வேறு முட்டுக்கட்டைகளும் சிக்கல்களும் நாளாந்தம் ஏற்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்த மக்கள் பலர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாதவர்களாகவும் தமது ஆலயங்களை பல்வேறு தடைகளைத் தாண்டி வருடத்தில் ஒரு தடவை மாத்திரமே பார்க்கக்கூடியவர்களாகவும் உள்ளனர்.
இதனால் மக்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்படுவதற்கு இராணுவத்தினர் காரணமாக இருந்து வருகின்றனர் என யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்தார்.
வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரின் அனுமதியுடன் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா திருப்பலியை ஒப்புக் கொடுத்து மறையுரையாற்றுகையிலேயே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களில் வருடாந்த திருவிழாக்களைக் கொண்டாடுவதற்கு இராணுவத்தினரின் அனுமதி கிடைக்குமா? என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் மக்கள் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தால் 24 வருடங்களுக்கு முன்னர் இங்கு குடியிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர் காரணமாக மக்களின் வீடுகள் மட்டுமல்லாது ஆலயங்களும் பெரும் சேதங்களுக்குள்ளாகி பாழடைந்த கட்டடங்களாக உள்ளன.
வலி. வடக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அகதிகளாகவும் அநாதைகளாகவும் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லை. பலர் போரால் காயமடைந்து அவயவங்களை இழந்த நிலையில் வாழ்கின்றனர். இவ்வாறு இப்பகுதி மக்கள் பல இடங்களில் சிதறுண்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மீண்டும் தங்களுடைய ஆலயங்களுக்கு வருவதற்கு ஆர்வமாக இருந்தாலும் அதற்கான அனுமதி உடனே கிடைப்பதில்லை. இதனால் மக்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள ஆலயங்கள் இவ்வாறு பாழடைந்து போவதால் 15 வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். மீண்டும் எம் மக்கள் ஆலயத்தை தரிசிக்கவும் துப்புரவு செய்து வழிபாடு செய்யவும் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களும் முயற்சி செய்கின்றோம் என்றார்கள். ஆனால் எல்லா இடங்களுக்கும் போக முடியாது என்றனர்.
மக்கள் வருடா வருடம் தங்கள் ஆலயத் திருவிழா வரும்போது தாங்கள் ஆலயத்திற்கு போவோமோ இல்லையோ இராணுவத்தின் அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்ற அங்கலாய்ப்புடன் காத்திருப்பது தொடர்கின்றது.
வருடத்தில் ஒரு தடவை மாத்திரமே ஆலயங்களைத் தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதால் இங்குள்ள ஆலயங்கள் பாழடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளே நுழைய முடியாத அளவிற்கு காணப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும் போது இறைபக்தி மிக்க மக்கள் பெரும் மனவேதனை அடைகின்றனர்.
இவ்வாறு இராணுவத்தினர் அதிகமாக வடக்கில் நிலை கொண்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இத்தகைய தடைகள் விரைவில் அகல வேண்டும் என்றார்.