வடகிழக்கில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கு பேசாமடந்தைகளான தமிழ்த்தலைமைகளே பொறுப்பு :ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

ஐக்கியதேசியக் கட்சி தனது உள்ளுராட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்குக் கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைக்கப்போவாதகத் தெரிவித்திருக்கிறது. தமிழ் இன அழிப்புப் போரை நடாத்திய அரசாங்கம் இப்போது தமிழ்ப் பண்பாட்டுப்போரில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே பௌத்த விகாரைகளைப் பெரும் எண்ணிக்கையில் அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வடகிழக்கில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கான பொறுப்பைப் பாராளுமன்றத்தில் பேசாமடந்தைகளாக உள்ள நமது தமிழ்த் தலைமைகளே ஏற்கவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நல்லூர் பிரதேசசபைத் தேர்தலில் மாம்பழச்சின்னத்தில் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (06.02.2018) அரியாலை பூம்புகாரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமாயின் அந்த இனத்தைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அந்த இனம் பேசுகின்ற மொழியையும், அந்த இனத்தின் உயிர் நாடியாக உள்ள பண்பாட்டையும் மெல்ல மெல்லக் கருவறுத்தாலே போதும் அந்த இனம் கடைசியில் பெரும்பான்மை இனத்தில் கரைந்து அழிந்து போய்விடும். எமது மதம் எமது பண்பாட்டின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். இதனால்தான் அரசாங்கம் பௌத்த மதத்தை எம்மீது திணிக்கும் பண்பாட்டுப்போரை ஆரம்பித்துள்ளது.

புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவில் அரசாங்கம் இலங்கையில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்று மிகத் தெளிவாகக் தெரிவித்திருக்கிறது. இதற்கு, பாராளுமன்றத்துக்கு நாம் அனுப்பிவைத்திருக்கும் தமிழ்த்லைவர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மாறாக, புதிய அரசியல் அமைப்பை ஆதரித்தே பேசி வருகிறார்கள். உள்ளுராட்சித் தேர்தலில் தங்கள் கட்சிகள் தோற்றால் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியாமல் போய்விடும் என்று கவலைப்படுகிறார்கள்.
பௌத்த மதம் பெரும்பான்மையாக உள்ள தென்னிலங்கையில், அங்கு வாழுகின்ற மக்கள் விரும்பினால் அரசாங்கம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையையும், சிறப்புரிமைகளையும் வழங்கலாம். ஆனால், தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கில் பௌத்தம் பெரும்பான்மையாக இல்லை. எமது தாயகம் மதச்சார்பற்ற ஒரு பிரதேசமாகவே விளங்கவேண்டும். எந்தமதத்துக்கென்றும் தனியான முன்னுரிமை இல்லாமல் இந்துசமயம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் என்று எல்லா மதங்களும் ஒரே விதமாகவே கருதப்படவேண்டும். இதனைப் பாரளுமன்றத்தில் உள்ள தமிழ்த்தலைவர்கள் கேட்காத காரணத்தால்தான் எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இவற்றையெல்லாம் இடித்துரைத்துக் கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூர்ப் பிரதேசசபைத் தேர்தலில் மாம்பழச்சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை மக்கள் வெற்றிபெறச் செய்தால், பிரதேசத்தின் அபிவிருத்தியை அவர்கள் திறம்படச் செய்வார்கள். அதேநேரம் தமிழ்த்தேசிய விடுதலைப்போரட்டத்தின் தணலாக இன்று விளங்குகின்ற எமது முதலமைச்சருக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts