வங்கி முகாமையாளர்களுடன் விவசாய அமைச்சர் கலந்துரையாடல்

விவசாயிகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வங்கிகளின் வடபிராந்திய முகாமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2013) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

IMG_2031 copy

இச்சந்திப்பில் முகாமையாளர்கள் வங்கிகள் 2012,2013 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கிய மொத்தக் கடன்களினதும், விவசாயிகள் திருப்பிச் செலுத்தவேண்டிய மொத்தக் கடன்களினதும் விபரங்களை எடுத்துக் கூறினார்கள். பெரும்பாலான வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட கடன் மீளளிக்கப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதேசமயம் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட முன்னர், போரின் நெருக்கடிக்குள் வாழ்ந்தபோதும் வன்னி மக்கள் நூறு சதவீதம் கடனை மீளளிப்புச் செய்திருப்பதாகவும் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்காலப்பகுதியில் வன்னியில் கிராமிய மட்டத்தில் விவசாயக் குழுக்கள் சீரான முறையில் கட்டமைக்கப்பட்டிருந்தது இதற்கான காரணம் என்பதே பலரதும் கருத்தாக இருந்தது.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடபகுதி விவசாயிகள் கடன் சுமையால் அதிகம் அவதிப்படுவதற்கான காரணங்கள்பற்றி இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

வங்கி முகாமையாளர்கள், விவசாய நோக்கத்துக்காகக் கடன் பெறும் விவசாயிகள் ஒழுங்கான முறையில் கடன்களை மீளளிக்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் விவசாயத்துக்கெனப் பெற்ற கடனை வீடுகட்டுதல், வாகனங்கள் கொள்வனவு செய்தல் போன்றவற்றில் முதலீடு செய்வதாலேயே வருவாய் இன்றிக் கடளை மீளளிக்க முடியாமல் திண்டாடவேண்டிய நிலை ஏற்படுகிறது எனத் தெரிவித்தனர். அத்தோடு விவசாயிகளிற் பலர் ஒரு பயிர்ச் செய்கைக் காணியைக் காட்டிப் பலவங்கிகளில் கடன்பெற்று மேலும் மேலும் கடன் சுமையை ஏற்றிக்கொண்ருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கடும் வரட்சியினாலோ, வெள்ளப் பெருக்கினாலோ அல்லது நோய்களின் தாக்கத்தினாலோ அண்மைக்காலத்தில் பெரிய அளவுக்குப் பயிர் அழிவு ஏற்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் நுகர்வுமுறையே அவர்கள் இன்று கடன் சுமையால் அதிகம் அவதிப்படுவதற்கான காரணமாக இருப்பதாக முகாமையாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், விவசாயிகளது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயிகள், விவசாய அமைச்சு, வங்கிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்து பணியாற்றுவது அவசியம்.அந்தவகையில் விவசாயிகளுக்கு நிதிமுகாமைத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு ஊட்ட விவசாய அமைச்சு முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.

கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் போருக்குப் பிந்திய இந்தக் காலகட்டத்தில் எல்லாத்தரப்பினரையும் போலவே விவசாயிகளும் தங்களது இடிபாடடைந்த வீடுகளைக் கட்டுவது தொடர்பாகவும், இழந்த பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் அபிலாஷைகளைக் கொண்டிருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. அத்தோடு, அறுவடைக்காலத்தில் இலங்கை அரசாங்கம் அதே உற்பத்திகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதால் வடபகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களைக் குறைவான விலைக்கே விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுவும் அவர்கள் கடன்களை மீளளிக்கமுடியாமல் அவதிப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

விவசாயக் கடன்கள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் அவர்கள் கடனாளிகளாகிவிட்டிருந்தாலும்கூட அவர்களை அந்தச் சுமையில் இருந்து விடுவிக்கவேண்டியது எங்கள் எல்லோரினது பொறுப்பும் ஆகும். ஏனெனில், வடக்கின் பொருளாதாரமே விவசாயப் பொருளாதாரம்தான். வங்கிகள் கடன்களை வழங்கும்போது உண்மையான விவசாயிகளையும், அவர்களது தேவைகளையும் சரியாகக் கண்டறிந்து கடன்களை வழங்குவதும் அவசியம். இதற்குக் கடன்படிவத்தில் பரிந்துரையாளர்களில் ஒருவராக விவசாய அமைச்சின் சார்பில் விவசாயப் போதனாசிரியர் ஒருவரை இடம்பெறச் செய்வது கூடுதல் பயன் அளிக்கும். அத்தோடு, கடன்களை இரத்துச் செய்வதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை நாம் அறிவோம். ஆனால், விவசாயிகளின் கடன்களை மீளளிக்காமல் இருப்பதில் நியாயத்தன்மை இருப்பது நிரூபிக்கப்படின் வட்டிகளில் சலுகைகளையும், கடன் தவணைகளில் கால நீடிப்புச் செய்வதுபற்றியும் வங்கிகள் சாதகமானமுறையில் பரிசீலிக்கவேண்டும். விவசாயிகள் சந்தைப்படுத்தலிலும் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்கும்வகையில் வேறு உற்பத்திகளாக மாற்றுவதற்குரிய சிறு தொழிலகங்களை நிறுவுவதற்குரிய வழிவகைகள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். இத்திட்டங்களுக்கும் வங்கிகளின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் எஸ்.சுசீந்திரன், கொமேர்ஷல் வங்கி பிராந்திய முகாமையாளர் எஸ்.பி.ரஜீவன், இலங்கை வங்கி நடவடிக்கை முகாமையாளர் எஸ்.என்.மாணிக்கசிங்கி, தேசிய சேமிப்பு வங்கி பிராந்திய முகாமையாளர் வீ. அருளானந்தம், ஹற்றன் நாஷனல் வங்கி யாழ் மெட்ரோ கிளையின் முகாமையாளர் எஸ். சுந்தரேஸ்வரன் உட்பட ஏனைய வங்கிளின் முகாமையாளர்களோடு வடமாகாண சபை உறுப்பினர் சே.சயந்தன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயபணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், விவசாய அமைச்சின் ஆலோசகர் பொருளியல் விரிவுரையாளர் சி.வரதராஜன் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts