அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் வரும் ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க அறிவித்துள்ளார்.
அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு முதவீட்டு வங்கி, லங்கா புத்திர வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளை தனியாருக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராகவும் அதனைக் கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்காக அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 19 வங்கிகளினுடைய ஊழியர்களின் ஆதரவைப் பெற்றுள்ளோம்.
ஜனாதிபதியுடன் கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததனையடுத்தே பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கான தீர்மானத்தை எடுத்தோம்” ” என்று ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.
அரசு தனது முடிவை மீளப்பெறாவிட்டால், பொது மக்களின் ஆதரவும் மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க எச்சரித்தார்.