என்ரப்பிறைஸ் சிறிலங்கா எனும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வங்கிகள் கடன்தர மறுத்தால் 1925 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மக்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும். முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர மக்களிடம் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டின் பாதீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 50 கைத்தொழிற்சாலைகளை பரிசீலிக்கும் நோக்கில் நேற்று மங்கள சமரவீர யாழ்ப்பாணம் வந்திருந்தார். அந்தத் திட்டத்தில் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமைப்பட்ட பரிஸ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தேங்காய் எண்ணை, தூய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலையை அவர் திறந்தார். இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது-
வடக்கு மாகாணம் மீண்டும் அபிவிருத்தி அடைய வேண்டும் அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறுகின்றன. நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நிதி அமைச்சும், மத்திய வங்கியும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 45ஆயிரம் பெண்கள் நுண் நிதி நிறுவனங்களின் மூலம் பெற்றுக்கொண்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்காக 140 கோடி ரூபா ஒதுக்கப்பட்ருந்தது.
என்ரப்பிறைஸ் சிறிலங்கா திட்டத்தின் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமி டப்பட்டுள்ளது. இளைஞர்களுடைய சுயதொழில் முயற்சி, கடற்தொழில் அபிவிருத்தி, பெண்களின் சுயதொழில் என்று குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று மக்கள் அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கு இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டதே என்ரப்பிறைஸ் சிறிலங்கா திட்டமாகும்.
ஆனால் அது வடக்கில் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது தொடர்பில் நாளை (இன்று) வங்கிகளின் முகாமையாளர்கள், பணியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளேன். என்ரப்பிறைஸ் லங்கா திட்த்தில் சரியான முறையில் அணுகி கடன் கிடைக்க வில்லை என்றால் எனக்கு, எனது அமைச்சுக்கு முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.
1925 என்ற அலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளேன். அந்த இலக்கத்துக்கு அழைத்து இது தொடர்பில் முறையிடலாம். நடவடிக்கைகளை மேற்கொள்வேன்- – என்றார்.