நடுவரின் தவறான தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை அங்கிருந்து அகற்றுமாறு லோர்ட்ஸ் மைதான நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து தேசியக் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டது.
இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 45 நிமிடங்களின் பின்னர் இலங்கை தேசியக்கொடி அகற்றப்பட்டுள்ளது.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி வீரர் ஹேல்ஸின் விக்கெட்டை, நுவன் பிரதீப் வீழ்த்தினார்.
போல்ட் முறையில் இந்த ஆட்டமிழப்பு எடுக்கப்பட்டது. ஆனால் நடுவரினால் நோபோல் என சைகை காட்டப்பட் டது.
ஆனால் ரீப்ளேயில் அது நோபோல் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் நடுவர் அந்தத் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவில்லை.
இதற்காகத்தான் இலங்கை தேசியக் கொடி லோட்ஸ் மைதானத்தின் இலங்கை அணியினர் அமர்ந்திருந்த பார்வையாளர் பகுதியில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியால் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் MCC கொடியைத் தவிர வேறெந்தக் கொடிகளும் பறக்கவிட முடியாது எனும் சட்ட வரையறையை, இலங்கை அணியினர் மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேவேளை, லோர்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தக்கூடிய நுவன் பிரதீப்பின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த நுவன் பிர தீபின் 2 வாய்ப்புகள் அடுத்தடுத்து தவறவிடப்பட்டன.
அதுமட்டுமல்லாது நடுவரின் தவறான நோபோலினால் வீழ்த்தப்பட்ட விக்கெட் இல்லாமல் போய்விட்டது என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகம் போர்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன ஈஎஸ்பிஎன் கிரிக்கின்போ இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நடுவர்களின் தீர்ப்புக் குறித்து கவலையை வெளிப்படுத்தியிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டவசமாக நடுவர்களின் தீர்ப்பு இவ்வாறு நடப்பது வழமை. இருப்பினும் நான் தேசியக் கொடி தொடர்பில் நிறைய கதைக்கவிரும்பவில்லை.
தீர்ப்பு தொடர்பில் அவர்கள் அவ்வாறு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பமில்லை. போட்டியின் இறுதிநாள் என்பதால் போட்டியில் வெற்றிபெறவேண்டும் மற்றும் அணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே அவ்வாறு கொடியை கட்டியிருக்கலாம்.
எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு செய்திருக்க முடியாது. இது ஒரு எதிர்ப்பாக இருக்க முடியாதென நான் நினைக்கின்றேன்.
அவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமானால் அது தொடர்பில் தரவுகளைப் பெற்று, கடிதமொன்றை எழுதி போட்டி நடுவரிடம் கையளிக்க முடியும்.
ஒன்றை மட்டும் சொல்ல முடியும் நாம் விளையாடுவது நம் தாய் நாட்டிற்காகத் தான். MCC ஒரு பாரம்பரியமான பிரதேசம் என்பதால் எந்தவொரு கொடியையும் அங்கு பறக்கவிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.