திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அலைபேசியினூடாக அழைப்பை ஏற்படுத்திய நபர், ஆசை வார்த்தைகள் கூறி அவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
பின்னர், அப்பெண்ணை வவுனியாவுக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த நகைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக போலி நகைகளை கொடுத்துள்ளார்.
நகைகளை திருப்பித்தருமாறு கேட்ட போது, அந்த நகைகளில் தாலி செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
நடந்தவற்றை குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தி பெண், அவருடைய நெருங்கிய நண்பியொருவருக்கும் இது குறித்து கூறியுள்ளார். தப்பிச் சென்றவனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று எண்ணிய பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பி, அதேநபருக்கு அலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி, ஆசை வார்த்தை கூறி, அந்த நபரை தான் காதலிப்பதாக கூறியது மாத்திரமல்லாது, அவரை கொக்குவிலுக்கு வருமாறும் அழைத்துள்ளார்.
எதிர்பார்த்தைப்போன்று, சந்தேக நபர் கொக்குவில் பகுதிக்கு வந்தபின்னர், அங்கு தயாராக இருந்த இளைஞர் குழுவினர், சந்தேக நபரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி நையப்புடைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர், இவ்வாறு பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021 222 2222 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.