லிபிய பயணிகள் விமானத்தை கடத்திய ஆயுததாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எப்ரிக்கியா விமான சேவைக்கு சொந்தமான உள்ளூர் விமான சேவையில் ஈடுபடும் விமானம் கடத்தப்பட்டு தற்போது மோல்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தைக் கடத்திய நபர் கையில் கைக் குண்டொன்றை வைத்திருப்பதாகவும் தனது உத்தரவுகளை மீறினால் குண்டை வெடிக்க வைக்கப்போவதாகவும் எச்சரித்தே விமானத்தை கடத்தியுள்ளார்.
எனினும் எந்த காரணத்திற்காக விமானத்தைக் கடத்தினார் என்ற விபரம் இன்னமும் தெளிவில்லாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும் மோல்டாவில் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கிலேயே விமானம் கடத்தப்பட்டுள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதேவேளை குறித்த விமானத்தில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பிலும் குழப்ப நிலை நீடித்து வருகின்றது. முதலில் 65 பயணிகளும் விமானி உட்பட விமான சிப்பந்திகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் தற்போது மோல்டா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்திலிருந்து விமானியொருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
குறித்த பயணியின் தகவல்களுக்கு அமைய விமானத்தில் 111 பயணிகளும், விமானி உட்பட ஏழு விமான சிப்பந்திகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கோல் கயாலி என்ற விடுவிக்கப்பட்ட பயணியின் தகவல்களுக்கு அமைய விமானத்தை ஒருவரே கடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
லிபியாவின் சபா நகரிலிருந்து தலைநகர் ரிப்போலிக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானமே இடைநடுவில் அச்சுறுத்தப்பட்டு மோல்டாவுக்கு திசைத் திருப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.