அஞ்சான்’ படத்திற்கு யூ சான்றிதழ் வழங்க லேப்டாப் மற்றும் ஐ-பேடு போன்றவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் லஞ்சமாக வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமாரை கடந்த 18ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவருடன் மத்திய சினிமா தணிக்கை வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரையும் சிபிஐ விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று மீண்டும் மூன்று அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை குறித்த தகவல்களை நீதிபதியிடம் தெரிவித்த சிபிஐ அதிகாரிகள் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் அதிக வன்முறை காட்சிகள் இருந்ததால் அதற்கு யூ சர்டிபிகேட் தரமுடியாது என அதிகாரிகள் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் தயாரிப்பாளருடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையில் லேப்டாப், ஐபேடு ஆகியவற்றை லஞ்சமாக பெற்றுக்கொண்டு யூ சர்டிபிகேட் வழங்கியுள்ளதாக தெரிய வந்ததாக கூறினர். இதே போன்று அஞ்சான் படத்தின் தெலுங்கு பதிப்பான சிக்கந்தர் படத்திற்கு ரூ.50000 லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்படுள்ளது.
மேலும் யூ சர்டிபிகேட் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த படத்தயாரிபாளர் கைது செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு கோலிவுட்டை அதிர்ச்சி பெற வைத்துள்ளது. இதனால் அஞ்சான் படத்தயாரிப்பாளர் லிங்குசாமி உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.