யாழ்ப்பாணம் சுழிபுரம், காட்டுப்புலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் வழக்குநேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும், றெஜினாவுடன் சம்பவ தினத்தன்று பாடசாலையில் இருந்து சேர்ந்து வந்த நண்பியிடமும் சாட்சியங்கள் பெறப்பட்டன. வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி சிறுமி றெஜினா கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டது போன்ற அடையாளமும் காணப்பட்டது.
சிறுமியின் உடற்கூற்றுச் சோதனையில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் இறப்பு ஏற்பட்டது என்றும், சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முதலில் 5 பேரைக் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தானே கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் ஏனையோரை விடுவித்தனர். அதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. மக்கள் பரவலாகப் போராட்டங்களை நடத்தினார்கள்.
பின்னர் இருவர் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று மல்லாகம் நீதிவான் மன்றில் மேலதிக நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விளக்கத்துக்காக எடுக்கப்பட்டது.
சிறுமியின் உறவினரான பெண் முதலில் வாக்குமூலம் வழங்கினார்.
சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்ட கிணற்றில் உடுப்புத் தோய்த்துக் கொண்டிருந்தேன். அந்த வழியால் 4 பேர் சென்றனர். அவர்களைக் கண்டால் அடையாளம் காட்ட முடியும். அவர்கள் 3 பேரின் பெயர்கள் தெரியும் (பெயர்களைக் குறிப்பிட்டார்). அவர்களில் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வாக்குமூலமளித்ததுடன் அவர்கள் இருவரையும் சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் உயிரிழந்த சிறுமியின் நண்பியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
பாடசாலை முடிந்து தன்னுடனே றெஜினா வீடு திரும்பினார் என்றும், அப்போது அவர் கையில் தேக்கம்காய்களை எடுத்து வந்தார் என்றும் சிறுமி கூறினார்.
வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சந்தேகநபர்கள் 3 பேரின் விளக்கமறியலையும் நீதிமன்று நீடித்தது.