இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் வலுவான நோக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ள, மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பதிலளிக்க சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் கூடிய நம்பிக்கையான உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் மிகவும் வலுவான நோக்கம் இருப்பதை அமெரிக்கா அவதானித்துள்ளது. இது ஊக்குவிக்கப்பட கூடிய ஒரு அடையாளமாகும். இது நாட்டுக்காகவும் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்காகவும் மக்களுக்காகவும் முன்னோக்கி செல்லக் கூடிய மிக நீண்ட வழியாகும். விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பையும் சேர்ந்தவர்களின் மனங்களின் உள்ள வடுக்களை குணப்படுத்த மேலும் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த மூன்று தசாப்த சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் காலம் எடுக்கக் கூடும். இது மிக நீண்டகால செயற்பாடு என்பது கடினமானதும் கூட. தவிர்க்க முடியாத பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.
இது இலங்கை மக்களின் சமாதானம், அபிவிருத்தியை பாதுகாப்பதற்காகவும் இலங்கை மக்களின் நலனுக்கும் அடிப்படையானது. அனைத்து மக்களுக்கும் அமைதியான அபிவிருத்தியான இலங்கையை ஏற்படுத்தி கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் நிஷா பிஸ்வால் மேலும் தெரிவித்துள்ளார்.