ரோஹித் சர்மா 171*, கோலி 91; ஆஸிக்கு 310 ரன்கள் இலக்கு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 309 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட் ஆகாமல் 171 ரன்கள் எடுத்தார்.

CRICKET-AUS-IND

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பரிந்தர் ஸ்ரன் இடம்பெற்றார். இது அவருடைய முதல் சர்வதேசப் போட்டியாகும். மணிஷ் பாண்டேவுக்கும் அணியில் இடம் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்கள் போலண்ட், பாரிஸ் இடம்பெற்றார்கள்.

தொடக்க வீரர்களாக தவனும் ரோஹித் சர்மாவும் களமிறங்கினார்கள். தவன், 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் கோலியும் அருமையாக ஆடினார்கள். தகுந்த நேரத்தில் பவுண்டரிகளை அடித்து அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார்கள். 63 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. 21.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. 31-வது ஓவரில் 150 ரன்களை எடுத்தது. பிறகு கோலி 61 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கோலியின் முதல் அரை சதம் இது.

முதலில் இருந்தே கவனமாக் ஆடிவந்த ரோஹித் சர்மா, 122 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருடைய 9-வது ஒருநாள் சதமாகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 3 முறை சதமடித்துள்ளார்.

கோலியும் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 91 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆனார் கோலி. இந்தக் கூட்டணி 207 ரன்கள் சேர்த்து இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

ரோஹித் சர்மாவின் கடந்த 6 சதங்கள், 135 ரன்களுக்குக் கூடுதலாக எடுக்கப்பட்டவை (137, 138, 141*, 150, 209, 264). இந்தமுறையும் சதம் அடித்தபிறகும் வேகம் குறையாமல் ஆடினார். 48-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார். 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த தோனி, ஃபாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட் ஆகாமல் 171 ரன்கள் எடுத்தார் (13 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்).

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஃபாக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் அவுஸ்ரேலிய அணி 208 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Related Posts