வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் சட்டங்களை பாரியளவில் பகிரங்கமாகவே மீறி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தொடர்ந்தும் பாரிய தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். அவ்விடயம் தொடர்பாக கடந்த காலங்களில் நாம் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தோம். இருந்தபோதும் குறித்த அமைச்சரின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிலையில் தற்பொழுது பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினம் நெருங்கி வருகின்ற தருணத்தில் அமைச்சர் றிசாட் பதியூதீன் அரச ஊழியர்களை தனது தேர்தல் பிரசார பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றார்.
தனக்காக பிரசார பணிகளில் ஈடுபட்டால் மாத்திரமே தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தரப்படும் என கூறியுள்ளதன் காரணமாக அவர்கள் நெருக்கடியான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிர்ப்பந்தத்திலேயே தாம் பிரசாரப் பணிகளை முன்னெடுக்க முயன்று வருவதாக அவர்கள் எம்மிடத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் வாக்காளர்களுக்கு கிராமங்கள் தோறும் தையல் இயந்திரங்கள் மற்றும் உணவுப்பொதிகளை வழங்கி, தனக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். இந்த பொருட்கள் அனைத்தும் தேர்தலுக்கு முன்னர் வெள்ள அனர்த்தம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தும் அவற்றை உரியவர்களுக்கு வழங்காமல் பதுக்கி வைத்திருந்து இப்போது வாக்குகளை சுவீகரிப்பதற்காக வழங்கி வருகின்றார்.
அதுமட்டுமின்றி கண்டி வீதி, மன்னார் வீதி உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து பாதைகளிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் றிசாட் பதியுதீனின் விருப்பு இலக்கம் குறிக்கப்பட்ட உருவப்படங்கள் இன்றுவரை அகற்றப்படவில்லை. எனவே அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது உடனடியாகவே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்க்கடிதத்தில் உள்ளது.