ரிஷாட் பதியூதீனின் சகோதரரை மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மேன்மைதங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts