சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா இரண்டு வாரங்களில் சிசுவொன்றை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.கடவுச் சீட்டில் வயதை மாற்றி ரிசானா சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ரிசானாவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் திருகோணமலையில் உள்ள அவரது உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் போன்ற பல்வேறு தரப்பினரும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் நயீப் பின் அப்துல் அசீஸ் இன்று உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ரிசானா மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்ப்புக்கள் காணப்பட்டன.அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் மட்ட முயற்சிகள் மேற்கொண்டிருந்தவேளையில் ரிசானா நபீக் மீது சவூதி அரசாங்கம், மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.இச்சம்பவத்தால் துயருற்றிருக்கும் ரிசானாவின் குடும்பத்தினர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.