சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராம்குமார் பற்றி வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது என வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை கடந்த 1ந் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்வதற்காக போலீசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராம்குமார் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னை கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்.
இந்நிலையில் நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து பேசினார் வழக்கறிஞர் ராமராஜ். சந்திப்புக்கு பின்னர் அவர் அளித்துள்ள பேட்டியில், சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது.
இப்போதுதான் ஒவ்வொரு விஷயங்களாக வெளிவருகிறது. அவரை போலீஸார் அதிகாலையில் கைது செய்யவில்லை. முதல்நாளே கைது செய்துவிட்டனர். வெளியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு அவருடைய கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். தாடைப் பகுதியில் அறுத்தால், சரியாக பேச முடியாது என்பதால் அவ்வாறு செய்துள்ளனர். பிறகு, ரத்தம் வடிய மயங்கிய நிலையில் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர். அந்தப் பகுதியில் மின்தடையை ஏற்படுத்திவிட்டு, ராம்குமார் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வெளியில் எழுந்து வந்த அவரது தந்தை பரமசிவத்திடம், இது உன் பையனா கழுத்தை அறுத்துக்கிட்டான்’ எனக் கூறியுள்ளனர்.
அங்கு வைத்து ராம்குமாரைக் கொல்லாமல் விட்டதற்குக் காரணம், மீனாட்சிபுரம் கிராம மக்களின் ஒற்றுமைதான். ஊருக்குள் வைத்துக் கொன்றுவிட்டால், மக்கள் எளிதில் நம்மை விட்டுவிட மாட்டார்கள் என உள்ளூர் காவலர்கள் கூறியதால், அமைதியாக இருந்துவிட்டனர்.
ஊடகங்களிடம், சுவாதி வழக்கில் கைது செய்து விடுவார்களோ எனப் பயந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தான்’ எனப் பரப்பிவிட்டனர். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிட்டு ராம்குமாரை உளவியல் ரீதியான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ வழியில், ஏதாவது செய்து விடுவார்கள் என மிகுந்த பயத்தில் அவர் இருக்கிறார்.
அவருக்கு எது நடந்தாலும் போலீஸார்தான் முழுப் பொறுப்பு.நெல்லையில் அவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம், அவருடையது அல்ல. இந்த வழக்கின் முக்கியமான உண்மைகள் விரைவில் வெளிவரும்!” என்றார் சுவாதி வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் தரப்பில், நாங்கள் கைது செய்யச் சென்றபோது பயந்து போய், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது உண்மை. வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இவ்வாறு சொல்வது காலம்காலமாக நடந்து வருகிறது. இதற்கு மேலும், அவர்களின் புகார் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.