ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் இல்லாமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டம்

மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருப்பதால், இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் பெரிய கப்பல்கள், இலங்கையை சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது.

nithen-gadkari

இதனால், பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக மன்னார் வளைகுடா பகுதியில் கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால், ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படும் என்று கூறி இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல், சேது சமுத்திர திட்டத்தை மாற்றுவழிப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பாக 6 பரிந்துரைகளை நிபுணர்கள் குழு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடம் அளித்து உள்ளது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், கோர்ட்டின் உத்தரவை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிவிப்பார்.

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மிகப்பெரிய 12 துறைமுகங்களின் செயல்பாடுகள் பாராட்டும் அளவில் உள்ளது. இவற்றை சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது நமது துறைமுகங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டி உள்ளது.

நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த அமைச்சகத்தின் பங்கு குறைந்தபட்சம் 1 சதவீதம் இருக்கும். தற்போது 12 முன்னணி துறைமுகங்களின் நிகர லாபம் ரூ.1,500 கோடி ஆகும். அடுத்த இரு ஆண்டுகளில் இந்த நிகர லாபம் மேலும் ரூ.1000 கோடி அதிகரிக்கும். அத்துடன் சரக்கு கையாளும் திறனும் 10 கோடி மெட்ரிக் டன் அதிகரிக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய 3 துறைமுகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எண்ணூர் துறைமுகத்தில் 5 புதிய கப்பல் இறங்குதளங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

சென்னை துறைமுகத்தை பொறுத்தவரை பறக்கும் சாலை திட்டம் நிறைவேறும் பட்சத்தில் தான் அங்கு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே பறக்கும் சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளச்சல் துறைமுகம் சர்வதேச கடல் எல்லைக்கு மிக அருகில் அமைந்து உள்ளது. இந்த புதிய துறைமுகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

துறைமுகங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நீர்வழி போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், கடந்த காலத்தில் ஒரு முக்கிய நீர்வழித் தடமாக இருந்த ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை இணைத்த பக்கிங்காம் கால்வாயை மீண்டும் ஒரு முக்கிய வழித்தடமாக மாற்றுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் இணைந்து நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

Related Posts