ராணுவ பாதுகாப்புடன் பயணிக்கும் யாழ். மக்கள்!

ராணுவ கட்டுப்பாட்டில் காணப்படும் யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் போக்குவரத்து செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளில் ராணுவத்தின் பாதுகாப்புடனேயே மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மயிலிட்டி துறைமுகம், கடந்த மாதம் ராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. மயிலிட்டியில் வாழ்ந்த பெருமளவான மக்கள் பருத்தித்துறையில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்ததால், மயிலிட்டிக்குச் செல்ல அன்றாடம் 42 கிலோமீற்றர் தூரமான சுற்றுப் பாதையை கடக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் ஊடாக மயிலிட்டியை இலகுவாக சென்றடைய முடியும் என்ற போதிலும், அதனை ராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் மக்களுக்கு இச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ராணுவத்தின் துணையுடன் வீதியை கடக்கும் மக்கள், விரைவில் எவ்வித தலையீடுகளும் இன்றி சுதந்திரமாக சென்றுவர வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Posts