ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க ராணுவமே வந்தாலும் கவலையில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சினிமா நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தனது வீட்டிற்கு முன்னர் நேற்று இரவிலிருந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சிம்புவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள்,அவரது வீட்டு முன்னர் கூடியுள்ளனர்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சிம்பு,”ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக சென்னைக்கு மத்திய ராணுவம் வந்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.ராணுவம் வருவது குறித்தெல்லாம் நமக்கு பிரச்சனைகள் இல்லை.ஆனால் தமிழகம் முழுவதும் அத்தனை லட்சம் பேர் போராடி வருகிறார்கள்.அவர்களை யாராவது தாக்கினால்,அது மிகப்பெரிய பாவம்.அவர்கள் அடி வாங்க வேண்டியவர்கள் கிடையாது.இந்த மண்ணின் புதல்வர்களை நாம் காப்பாற்ற வேண்டும்.
ராணுவமே வந்தாலும்,இரவோடு இரவாக எங்கெல்லாம் தேசியக் கொடி இருக்கிறதோ,அதையெல்லாம் மெரினா கடற்கரையில் இருப்பவர்களுக்கு உடனடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.தேசிய கொடி மேலிருந்தால்,யார் அவர்களை தாக்க முடியும்?தேசிய கொடி மேலே இருக்கும் போது,நீங்கள் அடித்துப் பாருங்கள் பார்க்கலாம்..!” என கொந்தளிப்பாக கூறினார்.