ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாவற்குழி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் ஆட்கொணர்வு மனு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ் மனுவில் நாவற்குழி ராணுவ முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், இரண்டாம் எதிரியாக இராணுவ தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.