இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய மத்திய அரசின் கருத்தைக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த 2014-ஆம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து அவர்களையும், இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது.
டெல்லி பொலிஸ் சட்டப் பிரிவின்படி, புலன் விசாரணைக்காக இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், குற்ற விசாரணை சட்டத்தின் (சிஆர்.பி.சி.) 432-ஆம் பிரிவான தண்டனைக் குறைப்பை அமல்படுத்த மாநில அரசு முன்வரலாம். அப்படி முன் வரும்போது, குற்ற விசாரணை சட்டத்தின் 435-ஆம் பிரிவின்படி, மத்திய அரசை அந்த மாநில அரசு கலந்து பேச வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது. அதுதொடர்பான கருத்தை மத்திய அரசு 3 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு பெப்ரவரி 19-ம் திகதியன்று தமிழக அரசு கடிதம் எழுதியது.
தண்டனைக் குறைப்பு தொடர்பான கருத்தைத் தெரிவிப்பதற்குப் பதிலாக அப்போதிருந்த மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
ஆனால் அந்த வழக்கில் உள்ள சட்ட அடிப்படையிலான கேள்விகளில் இருந்த முக்கியத்துவத்தைக் கருதி, வழக்கை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு 3 நீதிபதிகளும் அனுப்பி வைத்தனர்.
அந்த வழக்கில் எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு, மீண்டும் வழக்கை 3 நீதிபதிகளின் அமர்வுக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் திகதியன்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்காகப் பட்டியலிடப்படவில்லை.
இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் 24 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விட்டதாகக் கூறி, அதனால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளனர். இதில் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த 7 பேரின் மனுக்களைப் பரிசீலித்து, அவர்கள் அனைவருமே 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டதால், தண்டனையைக் குறைத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சூழ்நிலையில், குற்ற விசாரணைச் சட்டத்தின் 435-ஆம் பிரிவின்படி, தமிழக அரசின் முடிவு தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு எழுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், 435-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனை என்ற வார்த்தை, தெரியப்படுத்துதல் என்பதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் அனுமதியைப் பெறுதல் என்ற அர்த்தத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதை மறுசீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான மாநில அரசின் உரிமையை விட்டுத் தரவில்லை என்பதை இதன் மூலம் கூறிக் கொள்கிறோம் என்று தனது கடிதத்தில் கே. ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.