ராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரிக்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

KP-kumaran-pathmanathan

ராஜீவ் கொலை வழக்கில் இலங்கை விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்த குமரன் பத்மநாபனுக்கு (கே.பி) தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஆகையால், இவரை இந்தியாவிற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதன் மீதான தீர்ப்பை திகதி அறிவிக்காமல் ஒத்திவைத்தனர். இந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்த முடியாது என்று அறிவித்த நீதிபதிகள் பொலிஸ் அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

குமரன் பத்மநாதன், 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ்காந்தி கொலை குண்டுவெடிப்பு வழக்கில் சர்வதேச காவல்துறையினரால் தேடப்பட்டவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கும் தலைமைப் பொறுப்பிலும் இருந்து வந்ததாக தெரிகிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு தன்னை அந்த இயக்கத்தின் தலைவராக அறிவித்துக் கொண்டார். இறுதிக்கட்ட போரின்போது மலேசியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts