ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம்

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்த முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 2 பேர் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி இவர்களுடைய தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வதாக பிப்ரவரி 19-ந் தேதி தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கில் இறுதி முடிவை எடுப்பதற்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முடிவு செய்யும் என்று அன்றைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியல்சாசன அமர்வு கீழ்கண்ட அம்சங்களையும் கருத்தில் கொள்ளவும் கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை என்பது அந்த கைதி தன்னுடைய எஞ்சிய ஆயுள் முழுவதுமான சிறை தண்டனையா? அல்லது ஆயுள் தண்டனை கைதி விடுதலை பெறுவதற்கு உரிமை உண்டா? குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனைக்கு பதிலாக விடுதலை கிடைக்காத வகையில் 14 ஆண்டுகளுக்கு மேலான சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்ய முடியுமா?

ஜனாதிபதியும், கவர்னரும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த பிறகு குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவுகளின்படி ‘உரிய அரசு’ இந்த கைதிகளை விடுதலை செய்வதற்கு அதிகாரம் உண்டா? மத்திய அரசு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கா அல்லது மாநில அரசுக்கா? என்பது உள்பட பலவற்றையும் கருத்தில் கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு முன்பு ஜூலை 15-ந் தேதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்றது. ஆகஸ்டு 12-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் முக்கியமான அம்சங்கள் வருமாறு:-

இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரிமினல் வழக்குகளில் தண்டனை குறித்து தீர்வு காண்பதற்கு இந்த அம்சங்களின் மீதான முடிவு உதவும்.

மத்திய அரசின் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. போன்ற நிறுவனங்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்ய முடியாது.

இதுதொடர்பாக மாநில அரசுகள் ‘உரிய அரசான’ மத்திய அரசின் ஒப்புதலை பெற்றே அவர்களை விடுவிக்க முடியும். இதுபோன்ற வழக்குகளில் ஆலோசனை என்பதற்கு ஒப்புதல் என்று பொருள்படும்.

தீவிரவாதம், பாலியல் வன்முறை உள்ளிட்ட கடும் குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் அது ஆயுள் முழுவதற்குமான தண்டனை தான். அவர்களை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது.

ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என்று தற்போது பின்பற்றப்பட்டு வந்தாலும், குற்ற செயல்களை பொறுத்து 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம்.

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா என்பது குறித்த கேள்வியை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனியாக விசாரிக்கும்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வினை அமைத்து தமிழக அரசு இந்த 7 பேரையும் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது சரியா? என்பதனையும் மற்ற குற்ற வழக்குகளில் அந்தந்த குற்றங்களையும் இந்த தீர்ப்பையும் ஒட்டி முடிவுகள் எடுத்து அறிவிக்க 3 நீதிபதிகள் குழுவை அமைக்க பரிந்துரைப்பதாகவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசியல்சாசன அமர்வில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ் ஆகிய 3 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். மற்ற இரு நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் ஏ.எம்.சப்ரே ஆகியோர் இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும், அந்த குற்றம் மாநில எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. எனவே இந்த விஷயத்தில் ‘உரிய அரசு’ என்பது மாநில அரசுதான். மாநில அரசுக்கு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானிக்க அதிகாரம் உள்ளது.

அதேபோல கடுமையான குற்றங்களில் தண்டிக்கப்படுபவர்களை 20 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் நடைபெற்ற காலகட்டத்தில் இருந்த அவர்களுடைய மனநிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், 20 ஆண்டுகளுக்கு பிந்தைய அவர்களது மனநிலை மற்றும் சிறையில் அவர்களின் நடத்தை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு விடுதலை குறித்து தீர்மானிக்க வேண்டும்.

அதனடிப்படையில் இதுபோன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் முழுவதுமே விடுதலை கிடையாது என்ற நிலைப்பாட்டிலும் உடன்பாடு கிடையாது. இவ்வாறு அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பில் பெரும்பான்மையாக 3 நீதிபதிகள் எடுத்த முடிவு தான் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts