Ad Widget

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம்

1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

perarivalan-santhan-murugan

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு தூக்குத் தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தமக்கு விதிக்கப்பட்டடுள்ள தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இந்த கால தாமதத்தை காரணம் காட்டி குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

அத்துடன் அவர்களை விடுவிப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் ராஜீவ் கொலை குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மனு தாக்கல் செய்து, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றது. இது தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையே கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் என்ன கொள்கை முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் ராஜீவ் கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுக்க தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார். அவர் ராஜீவ் கொலை குற்றவாளிகளை தூக்கில் போடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்தே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தூக்கில் போட பரிந்துரை செய்து மனு தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சட்ட அமைச்சிடம் உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்த 3 பேரையும் தூக்கில் போடுவதை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட சிறப்பு மனுவாக அந்த மனுவை தயாரித்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Posts