ராஜீவ் கைதிகள் விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதி தேவையில்லை!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலை தொடர்பில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் புதிய மனு ஒன்று நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாந்தன், ரொபர்ட் பயாஸ், பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், நளினி, ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சமீபத்தில் தமிழக அரசு கடிதம் எழுதியது. இருப்பினும், குறித்த 7 பேருடைய விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆண்டு அந்நீதிமன்றின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இது போன்ற வழக்குகளில் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி பெற வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை’ என கூறப்பட்டு உள்ளது.

Related Posts