ராஜபக்‌ஷவுக்கு வால் பிடிப்பதை நிறுத்துக!- ஆதரவாளர்களுக்கு ரணில் ஆலோசனை

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் ஆதரவு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்த யோசனையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றில் முன்வையுங்கள். அதை நாம் கருத்திற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஆலோசனை கூறி, கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டினதும் எமது கட்சியினதும் எதிர்க்காலத்தை கருத்தில்கொண்டு நாம் சில முக்கியமான செயற்றிட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். அதாவது, எதிர்க்காலத்துக்கு உகந்த வகையில் கட்சிக்குள் சில மாற்றங்களை வெகுவிரைவில் செய்யவுள்ளோம்.

நாடாளுமன்றையும் புதுப்பித்தால் மட்டுமே நாடு ஸ்தீரமடையும் எனும் நிலைப்பாட்டிலும் இருக்கின்றோம். இதற்காகவே புதிய அரசமைப்பை ஸ்தாபிக்க நாம் மும்முரம் காட்டி வருகின்றோம். எமது இலக்குகளிலிருந்து நாம் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்பதையும் மக்களுக்கு கூறிக்கொள்ளவேண்டும்.

தேர்தல் காலங்களின்போது, நாட்டில் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவோம் என்று நாம் உறுதியளித்திருந்தோம்.

இதற்காக சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ளவும் எமது அரசு தீர்மானித்துள்ளது. இவை அடுத்த சில மாதங்களிலேயே நடைபெறும் என்பதால் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் குறித்து எவரும் அஞ்சவோ அல்லது சந்தேகப்படவோ தேவையில்லை.

இவ்வாறான ஒப்பந்தங்களை செய்துகொள்ளும் முன்னர் நாம் நாடாளுமன்றுக்கு அறிவிப்போம். இங்கு சகலரும் இதுகுறித்த யோசனைகளை முன்வைக்க முடியும். அரசு என்ற ரீதியில் நாம் அந்த யோசனைகளுக்கு நிச்சயமாக செவிசாய்ப்போம்.

இந்நிலையில், இந்தச் செயற்பாடுகளைக் கூட சிலர் தற்போது விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றுக்கு முன்வைக்கும் முன்னர் தம்மிடம் சமர்ப்பிக்குமாறுக் கேட்கின்றனர். ஆனால், நாம் மக்களின் ஆணைக்கிணங்க செயற்படுவதால் எமது யோசனைகள், திட்டங்கள், ஒப்பந்தங்கள் என அனைத்தையும் நாடாளுமன்றில் தான் முன்வைப்போம். இதனை விட ஜனநாயகம் வேறு எதிலும் இல்லை என்பதே எமது கருத்தாகும்.

கடந்த காலங்களில் தான் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வால் பிடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போதாவது உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாமே. அவருக்கு வால் பிடிப்பதை நிறுத்திவிட்டு எந்த யோசனையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றில் தெரிவிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்

Related Posts