ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்

ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.

salman-kan-namaal

தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.

மேலும் இலங்கையில் ராஜபக்சே மந்திரி சபையில் உள்ள தமிழ் அமைச்சர்களும் ராஜபக்சேவை சந்தித்து 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு ராஜபக்சே சம்மதித்தார்.

இந்த நிலையில் 5 மீனவர்கள் விடுதலைக்கு நடிகர் சல்மான்கானும் மறைமுகமாக உதவிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சல்மான்கானின் தங்கை திருமணம் ஐதராபாத்தில் நடந்தது. இதற்கான திருமண அழைப்பிதழை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கொழும்பில் உள்ள தனது நண்பரும் பத்திரிகையாளருமான ரஜத் சர்மா மூலம் கொடுத்து அனுப்பினார்.

ரஜத் சர்மா ராஜபக்சேவை நேரில் சந்தித்து சல்மான்கான் தங்கை திருமண அழைப்பிதழை கொடுத்தார். அப்போது ரஜத் சர்மா பத்திரிகையாளர் என்ற முறையில் 5 தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனை பிரச்சினையை எடுத்துக்கூறி அவர்களை விடுதலை செய்ய கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்று பல வழிகளில் இருந்தும் நட்பு வட்டாரங்களில் இருந்தும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வந்ததால் ராஜபக்சே அவர்களை விடுதலை செய்ய முன் வந்தார் என்றும் கூறப்படுகிறது.

பத்திரிகையாளர் ரஜத் சர்மா நடிகர் சல்மான்கானுக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ராஜபக்சேக்கு நண்பர். பாராளுமன்ற தேர்தலின் போது மோடியை அவர் டி.வி.க்காக சந்தித்து பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான்கான் அழைப்பை ஏற்று அவரது தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொள்ள ராஜபக்சே தனது மகன் நமால் ராஜபக்சேவை அனுப்பி வைத்தார். அவர் மணமக்களை வாழ்த்தி எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சல்மான்கான் தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொண்டது அன்பான ஒன்று’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts