ரஷ்யாவின் கசான் நகரில் இவ்வாரம் முற்பகுதியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் தங்களது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
நவம்பர் 17 ஆம் திகதி ரஷ்ய குடியரசின் டடரிஸ்தான் கசான் நகரில் இடம்பெற்ற விமான விபத்தின் மூலம் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்களை அறிந்து நான் பெரிதும் கவலையடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமான விபத்தின்போது விமானத்தில் பயணித்த 50 பயணிகளும் பலியாகியிருந்தனர். தங்களது உறவுகளை இழந்து துயறுற்றிருக்கும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதில் இலங்கை அரசாங்கமும் மக்களும் என்னுடன் இணைந்து கொள்கின்றனர் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இந்த துயர் நிறைந்த சந்தர்ப்பத்தில் நாம் ரஷ்ய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எமது நட்புறவை வெளிப்படுத்துவதோடு எமது கவலைகளையும் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.