ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ரஷ்யா முழுமையாக வெளியேறும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவை தங்கள் எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
இதற்காக உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குவததுடன், ரஷ்யாவிற்கு மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றோம். உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதில் உறுதியாக இருக்கின்றோம்.
இந்நிலையில், புதன்கிழமை துருக்கிக்கு பயணம் செய்யுள்ளதாக லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஒடேசாவிலிருந்து தானியங்களைப் பெறுவதற்கான விருப்பங்களைப் பற்றி விவாதிக்கவும், தீர்வுகளை காணவும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது பாரிய தடைகளை விதிப்பதில் ஒருங்கிணைந்துள்ளன.
“நாங்கள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதிப்போம், உக்ரைனில் இருந்து ரஷ்யா முழுமையாக வெளியேறுவதைப் பார்க்கும் வரை ரஷ்யாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவோம்” என்று டிரஸ் கூறினார்.
மொஸ்கோ மீதான அதன் பரந்த பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் வணிகங்களை பிரித்தானியா குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.