ரஷ்யா- உக்ரைன் போர்: உலகம் முழுவதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை

ரஷ்யா- உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், 2022ஆம் ஆண்டு உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்தாண்டில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்தாண்டு கூடுதலாக 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்த போரில் மட்டும், 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோ, கரீபியன் தீவு நாடான ஹைதி ஆகியவற்றில் நடந்த வன்முறை, பயங்கரவாத சம்பவங்கள், குழுக்களுக்கு இடையேயான மோதலில் கணிசமான பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நடந்த வன்முறையில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடான கொலம்பியா, தென் கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸ் ஆகியவை, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடுகளாக உருவெடுத்துள்ளன.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts