ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டே முக்கால் வயதுக் குழந்தை ஒன்றுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவ்வளவு சிறிய குழந்தைக்குச் செய்யப்பட்ட முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்திற்கு அருகில் இருக்கும் விளாதிமிர் பகுதியைச் சேர்ந்தவர் நெல்லி குத்ரியாவ்செவ். இவருடைய குழந்தையான க்ளெப், ஒரு வயதிலிருந்து உடல் நலப் பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்தது.
மருத்துவ பரிசோசனையில் அந்தக் குழந்தைக்கு, ரெஸ்ட்ரிக்டிவ் கார்டியோ மயோபதி எனப்படும் பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தக் கோளாறின் காரணமாக, இருதயத்தின் ரத்தத்தை அழுத்தித் தள்ளும் திறன் குறைந்துகொண்டே வந்தது.
முதலில் ஜெர்மனியின் ம்யூனிக் நகருக்குக் குழந்தையை எடுத்துச் சென்றார் நெல்லி. இந்தப் பிரச்சனைக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்றும் மிகச் சிறிய குழந்தை என்பதால், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும் அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறினர். அதன் பிறகு அமெரிக்காவிலிருக்கும் மருத்துவர்களிடமும் இது குறித்து கேட்டார். அங்கிருக்கும் மருத்துவர்களும் இதே கருத்தையே தெரிவித்ததாகக் கூறுகிறார் நெல்லி.
அதன் பிறகு, ரஷ்ய மருத்துவர்கள் ஆலோசனையின்படி, சென்னையில் உள்ள ஃபோர்டிஸ் மலர் எனப்படும் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. மாற்று இருதயத்திற்கென பதிவும் செய்யப்பட்டது.
ஒன்றரை மாத காத்திருப்பிற்குப் பிறகு, பெங்களூரின் மணிப்பால் மருத்துவமனையில் இதே வயதுடைய யதார்த் என்ற குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில், அந்தக் குழந்தையின் இதயத்தை க்ளெப்பிற்கு பொருத்துவது என முடிவுசெய்யப்பட்டது.
பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த குழந்தையிடம் எடுக்கப்பட்ட இதயம் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 50 நிமிடங்களில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. சென்னை, பெங்களூர் ஆகிய இரு நகரங்களிலும் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் பாதைகளை காவல்துறையினர் வாகன நெரிசல் இன்றி பார்த்துக்கொண்டனர்.
பத்து மணி நேரம் வரை நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில் க்ளெப்பிற்கு மாற்று இதயம் பொறுத்தப்பட்டது. ஒரு வாரம் வரை தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த க்ளெப், தற்போது வேகமாகத் தேறி வருகிறான்.
இவ்வளவு சிறிய குழந்தைக்கு மாற்று இதயம் பெறுவதில் பல சவால்கள் இருப்பதாகக் கூறுகிறார் இந்த அறுவைசிகிச்சைக்குத் தலைமை தாங்கிய டாக்டர் கே. ஆர். பாலகிருஷ்ணன். “முதலாவதாக, குழந்தைகளைப் பொறுத்தவரை மாற்று பாகங்கள் கிடைப்பது கடினம். அடுத்தபடியாக வேறு எந்த நகரத்தில் கிடைத்தாலும், அதை இங்கே கொண்டு வர வேண்டிய செலவை நோயாளியின் தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்தக் குழந்தைக்கு ஏர் ஆம்புலன்சில் இதயம் கொண்டுவரப்பட்டது” என்கிறார் அவர்.
இருதயத்தின் அளவு சிறியது என்பதால் அறுவை சிகிச்சை சற்று கடினம் என்கிறார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
மாற்று இருதயம் பொருத்தப்பட்ட இந்த குழந்தை இன்னும் இருபது – முப்பது ஆண்டுகளுக்குப் பிரச்சனையின்றி வாழ முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மாற்று இருதயம் பொறுத்தப்பட்டு, குழந்தையை தன் கையில் கொடுத்தபோது, அவன் மீண்டும் பிறந்ததைப் போலவே உணர்ந்ததாகச் சொல்கிறார் நெல்லி
இந்தியாவுக்குக் குழந்தையை சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்போவதாகக் கூறியபோது, பலரும் இந்தியாவைப் பற்றி பயமுறுத்தக்கூடிய வகையில் கூறியதாகவும், தற்போது இந்தியாவைப் பற்றிய எண்ணம் தனக்கு மாறியிருப்பதாகவும் கூறுகிறார் நெல்லி. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குழந்தையுடன் நாடு திரும்பவிருக்கிறார் இவர்,.
இந்தியாவில் இந்த சிகிச்சைக்கு சுமார் 20 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. மேற்கத்திய நாடுகளில் 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்