முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக 7 சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் படுகொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீப் சந்திம தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாளர் சுகர்சினி ஹேரத், இந்த வழக்குத் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முடிவடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
பழனிச்சாமி சுரேஸ், ஹெற்றியாராச்சிகே பிரதீப் சந்தன குமார, காமினி செனிவிரத்ன, பிரதீப் சந்திம, சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், பபியன் ரோய்ஸ்டன் துசேன், சம்பத் முனசிங்க ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ்ழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.