ரவிராஜ் கொலைக்கு கருணாவிற்கு 5 கோடி வழங்கினார் கோட்டா?

யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த தொகை கருணா தரப்பினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரவிராஜ் கொலை சம்பந்தமான பதிவு செய்யப்படாத வழக்கு விசாரணை நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் நடைபெற்றது.

இதன் போது சிரேஷ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்கவின் நெறிப்படுத்தலில் அபயரத்ன சாட்சியமளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த கொலையானது கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியால் நடைபெற்றது எனவும் அதற்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்புக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இந்த கொலையானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டூல் மற்றும் கருணா தரப்பு தெரிந்தே மேற்கொண்டது.

கொலை நடந்த பின்னர், கருணா தரப்புக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கொலையுடன் சம்பந்தப்பட்ட கருணா தரப்பை சேர்ந்தவர்கள் என்னிடம் கூறினார்கள்.” என தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்த பதில் நீதவான், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ரவிராஜ் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த 4 ஆம் இலக்க சாட்சியாளரான ஹென்ஜலோ ரோய் என்பவரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரட்டுள்ளார்.

Related Posts