நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது தொடருந்து சேவைக்கான டிக்கெட் வழங்கும்போது சிறப்பு முறை பின்பற்றப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்தா பெர்னாண்டோ தெரிவித்ததாவது;
ரயில்வே திணைக்களம் பல அலுவலக தொடருந்து சேவைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. அதனால் பயணிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டியின் உள்ளே 50 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ரயில் நிலையங்களுக்குள் செல்லும்போது மற்றும் தொடருந்துகளுக்குள் முகக்கவசம் (மாஸ்க்) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பெட்டிகள் மற்றும் ரயில் தடங்களுக்குள் துப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை மீறும் பயணிகள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று திணைக்களம் கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்குகின்றது – என்றார்.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பயணிகள் தொடருந்து சேவையைப் பயன்படுத்த முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் கருமபீடத்தில் ஒரு மீற்றர் தூரத்தை பயணிகள் பின்பற்றவேண்டும்.
தொடருந்துக்குள்ளும், ரயில் நிலையங்களிலும் பிச்சை எடுப்பதும் வர்த்தகத்தில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தகைய விற்பனையாளர்களிடமிருந்து பொருள்களை வாங்கும் எந்தவொரு பயணியும் தொடருந்துக்குள் இருந்து வெளியேற்றப்படுவார் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடருந்துப் போக்குவரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுள்ளது.