ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக “ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்க முன்னணி” தெரிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரயில் சேவை ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பளப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். எனினும் அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதற்கு உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை. ஆகவே எமது கோரிக்கைகளில் அவதானம் செலுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே குறித்த பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளோம்.
எனவே நாளை நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்கள்,நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். எமது தொழிற்சங்கப் போராட்டத்தை 48 மணிநேரத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளோம்.
ஆகவே எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அல்லாதுபோனால் பரந்துபட்ட தொழிற்சங்கப் போட்டம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.