ரணிலால் வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமையாம்!

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தற்போது வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மீண்டும் பிரதமராக்கினால் 2009ஆம் ஆண்டு வென்றெடுக்கப்பட்ட சமாதானம் இல்லாதொழிக்கப்படும். மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பற்ற வேண்டுமாயின், மைத்திரி – மஹிந்த கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“அரச வளங்களைத் தேர்தலுக்குப் பயன்படுத்தமாட்டோம். நாம் நல்லாட்சி அரசு என்று கூறுகின்றனர். ஆனால், வெளிவிவகார அமைச்சின் இலக்கத் தகடுகள் மாற்றப்பட்ட வாகனங்கள் மாத்தறையில் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பிரசாரம் நடத்துவதற்காக சிறிகொத்தவில் 5 ஆயிரம் பேருக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, அலரிமாளிகைக்கு அருகிலுள்ள கட்டடத்தில் 400 பேர் மடிக்கணினியுடன் தயாராக இருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களினூடாக இவர்கள் பிரசாரம் செய்கின்றனர். கடந்த 160 நாட்களில் என்ன நடந்தது? வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு விரோதமாக சமாதான ஒப்பந்தம் செய்தார்.

அவ்வாறான நிலையில், அவர் மீண்டும் இந்த நாட்டின் பிரதமரானால் என்ன நடக்கும்? வென்றெடுக்கப்பட்ட சமாதானம் இல்லாதொழிக்கப்படும். மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும். இந்தச் சிக்கலிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு மைத்திரி – மஹிந்த தலைமைத்துவத்துடன் ஆட்சி அமையவேண்டும். அதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்” – என்றார்.

Related Posts