ரஜினி 9 நாளில் நடித்துக் கொடுத்த படம்

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், இப்போது வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறார். குறைந்த பட்சம் 3 மாதம் முதல் ஒரு வருடம் வரை கால்ஷீட் கொடுத்து நடிக்கிறார். ஆனால் 80 களில் ரஜினி ஆண்டுக்கு 8 படங்கள் வரை நடித்திருக்கிறார் அதிலும் சாதனையாக வெறும் 9 நாளில் நடித்துக் கொடுத்த படம் ஒன்று உண்டு. அது மாங்குடி மைனர்.

rajini

அப்போது பிசியான இயக்குனராக இருந்த வி.சி.குகநாதன் இந்தியில் ஹிட்டான ‘ராம்பூர் கா லட்சுமண்’ என்ற படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கி அதனை ரஜினிக்கு ஏற்றமாதிரி மாற்றி ‛மாங்குடி மைனர்’ என்ற பெயரில் தமிழில் எடுத்தார். 1978ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் விஜயகுமார் தான் ஹீரோ. ரஜினி வில்லன். ஸ்ரீப்ரியா ஹீரோயின். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.

ரயிலில் ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு ஆண் குழந்தைகளோடு பயணம் செய்வார்கள். ரயில் விபத்துக்குள்ளாக ஒரு குழந்தையை ஒரு திருடன் எடுத்துச் சென்று விடுவான். திருடன் எடுத்துச் சென்ற குழந்தை கொள்ளைக்காரனாக வளர்வான், அதுதான் ரஜினி. இன்னொரு குழந்தை ஊருக்கு நல்ல பிள்ளையாக அதாவது மாங்குடி மைனராக வளரும், அவர்தான் விஜயகுமார். ரஜினி செய்யும் ஒரு கொலை விஜயகுமாரின் நண்பன் செய்ததாக போலீஸ் கைது செய்யும். நண்பனை விடுவிக்க நிஜ கொலையாளியான ரஜினியை விஜயகுமார் தேடிச் செல்வார். இப்படி போகிற கதை.

இதற்கான திரைக்கதையை எழுதிவிட்டு ரஜினியை சந்தித்து கால்ஷீட் கேட்டார் வி.சி.குகநாதன். “கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வருடம் என்னிடம் தேதியில்லை. 9 நாட்கள் நான் இமயமலை போறதுக்கு வைத்திருக்கிறேன். அந்த 9 நாளில் கொஞ்சம் எடுத்துக்குங்க மீதியை அடுத்த வருடம் எடுத்துக்குங்க” என்று கூறியிருக்கிறார். அதற்கு வி.சி.குகநாதன் “அந்த 9 நாளிலேயே நான் உங்க போர்ஷனை எடுத்து முடிச்சிருவேன்” என்று கூறியுள்ளார். அதன்படி 9 நாளில் தினமும்18 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி ரஜினி போர்ஷனை எடுத்து முடித்தார். ரஜினி நடித்த படங்களிலியே மிகவும் குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம் ‘மாங்குடி மைனர்’. அதிக நாள் எடுகக்கப்பட்ட படம் எந்திரன். ஒரு வருடம்.

Related Posts