ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், அடுத்து கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார் ஷங்கர். 2.0 படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். சுமார் 350 கோடியில் தயாராகியுள்ள 2.0 படத்தை 500 கோடிக்கு விற்க திட்டமிட்டுள்ளது லைகா.
இந்த 500 கோடியில் தமிழ் வெர்ஷனுக்கு மட்டும் 100 என்று இலக்கு வைத்திருக்கிறார்கள். இந்தநிலையில் 2.0 படத்தை வெளியிட மாட்டோம் என விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்திருக்கிறது. ரஜினி நடித்த லிங்கா படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நிவாரணம் கேட்டு விநியோகஸ்தர்கள் போராடினார்கள். அதுபோல், கபாலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், அப்படத்தினால் தங்களுக்கு நஷ்டம் என்று போராட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ஓரணியில் திரண்டிருக்கும் கபாலி பட விநியோகஸ்தர்கள், ரஜினியை சந்தித்து நஷ்டஈடு கேட்க திட்டமிட்டுள்ளனராம். அவரிடமிருந்து உரிய பதில் வரவில்லை என்றால், ரஜினியின் அடுத்த படமான 2.0 படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிக்க திட்டமிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.