ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறிப் போனது என்றார் சோனாக்சி சின்ஹா. இவர் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.
இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:–
இந்தியில் சல்மான்கான், அஜய்தேவ்கான், சாகித்கபூர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு ரோல் மாடலாக இருப்பது ரஜினிதான். அவருடன் ‘லிங்கா’ படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. நிறைய கதாநாயகர்களுடன் நடித்த போதெல்லாம் கிடைக்காத அனுபவம் லிங்காவில் ரஜினியுடன் நடித்தபோது கிடைத்தது.
ரஜினி நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். உடம்பை கோவில் மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை சொன்னார். அவர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி தெரிந்தார். எளிமையாகவும் அன்பாகவும் பழகினார். அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
படப்பிடிப்பில் கேமரா முன்னால் இருக்கும் ரஜினி கேமரா பின்னால் இருக்கும் ரஜினி என இரு வேறு ரஜினியை பார்த்தேன். எனக்கு கேமரா பின்னால் இருந்த ரஜினியைதான் ரொம்ப பிடித்தது.
இவ்வாறு சோனாக்சி சின்ஹா கூறினார்.