‘பாகுபலி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி, பிரபல இயக்குனர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். பிரபல நடிகர்–நடிகைகள் அனைவரும் இவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று எண்ணும் அளவு ராஜமவுலியின் செல்வாக்கு கொடி கட்டி பறக்கிறது.
இந்திய திரை உலகின் அனைத்துப் பார்வையும் இவர்மீதுதான் இருக்கிறது. ராஜமௌலியின் ‘பாகுபலி–2’ மிக பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ராஜமௌலிக்கு கூடுதல் அந்தஸ்தை கொடுத்து இருக்கிறது. சினிமா துறையினர் மட்டுமல்ல, அனைத்து பிரிவினரிடமும் தனி மரியாதையை பெற்றிருக்கிறது. மாணவர்களிடமும் ராஜமௌலிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அழைப்பை ஏற்று ராஜமௌலி சென்னை வந்து அந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். மாணவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று, ‘‘ரஜினியுடன் எப்போது இணைந்து அவரது படத்தில் பணியாற்றுவீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த ராஜமவுலி, ‘‘இந்த கேள்வியை தென் இந்தியாவில் உள்ள எந்த இயக்குனரிடம் கேட்டாலும், ஒரே பதிலைத்தான் சொல்வார்கள்’’ என்றார். அடுத்து, நீங்கள் ரஜினியை இயக்கினால் எந்த மாதிரி பாத்திரத்தை அவருக்கு அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு, ‘‘அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன். ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால், முதல் 10 நாட்கள் அந்த படத்தில் எந்த வசனமும் காதில் விழாது. ரசிகர்களின் ஆதரவு அப்படி இருக்கும். அந்த ஆரவாரத்தை மட்டும்தான் படம் பார்ப்பவர்களால் கேட்க முடியும்’’ என்றார்.
ரஜினி பற்றி அவர் சொன்ன இந்த பதிலுக்கு, மாணவர்களின் கைதட்டலும் ஆரவாரமும் அடங்க நீண்ட நேரம் ஆனது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராஜமௌலி பதில் சொன்னார். ராஜமௌலியுடன் கலந்துரையாடியதை மாணவர்கள் தங்கள் நண்பர்களிடம் பெருமையாக சொல்லி மகிழ்ந்தனர். அப்படி ஒரு பெருமை அவர்களுக்கு.